புது தில்லி: புதிய அரசு அமைந்தவுடன் ஜூலை முதல் வாரத்தில் 2019 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, மோடி அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு இடைக்கால வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. அதில் சில சலுகைகளை வழங்கியது. தற்போது ஜூலை மாதத்தில் முழு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆதாரங்களின் படி, என்டிஏ (NDA) கூட்டணியின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, மோடி அரசு வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 2019 பட்ஜெட் உருவாக்குவதில் மோடி அரசு செயல்பட்டு வருவதால், புதிய அமைச்சரவை பதவியற்றவுடன் இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த வருடம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் அதிக கவனம் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கும். மேலும் வேலை வாய்ப்பை அதிக அளவில் அளிக்கும் ரியல் எஸ்டேட், இன்ஃப்ரா மற்றும் கட்டுமானத் துறை ஆகியவற்றிலும் அரசு கவனம் செலுத்தும் என்று தெரிகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படலாம். "மேக் இன் இந்தியா" மூலம் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றியும் வலியுறுத்தப் பட உள்ளது. இது தவிர, நேரடி முதலீட்டை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு பெரிய வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் திகதி, மத்திய அரசின் மோடி அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தது. ஆனால் இடைக்கால பட்ஜெட் தாக்குதல் செய்யும்போதே, இது முழு பட்ஜெட்டின் ஒரு பகுதியே எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.