முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா எதிர்வரும் மக்களவை தேர்தலில் தும்கூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவருமான எச்.டி. தேவே கவுடா மக்களவை தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என சந்தேகம் நிலவி வந்தது. மேலும் அவர் தும்கூர் தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் இன்று அவர் வரும் தேர்தலில் தும்கூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் வரும் 25-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
85 வயதாகும் தேவே கவுடா, தன்னால் இந்த வயதில் டெல்லியில் என்ன பங்களிப்பு செய்து விட முடியும் என்று சந்தேகம் கொண்டு போட்டியிடுவதா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு, தேவேகவுடா தும்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவித்து இதுகாலம் வரை இருந்து வந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
மேலும் ஹாசன் தொகுதியைத் தன் பேரன் பிரஜ்வால் ரெவன்னாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் தேவே கவுடா.
தும்கூர் தொகுதியில் தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக எம்.பி. முட்டஹனுமே கவுடா அறிவித்த அதே நாளில் தேவேகவுடா அத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே இவர் கோபமடைந்து போட்டி வேட்பாளராகக் களமிறங்கினால் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே இருக்கும் குழப்பங்களுடன் இந்தப் புதிய பிரச்சினையும் ஏற்படும்.
ஏற்கெனவே அத்தொகுதியில் காங்கிரஸ் எம்.பி இருக்கும் போது சீட்டை தேவே கவுடாவுக்கு தாரை வார்த்தது அந்தத் தொகுதி காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி வேட்பாளரை எதிர்த்து இத்தொகுதியில், பாஜக தரப்பில் தும்கூரில் பசவராஜ் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.