ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில் குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிலிருந்து நர்சிங் யாதவ் தகுதி பெற்றார். ஆனால் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரான சுஷில் குமார் காயம் காரணமாக தகுதிச்சுற்றில் பங்கேற்கவில்லை. தற்போது நானும் பங்கேற்க விரும்புகிறேன் என சுஷில்குமார் மல்யுத்த சம்மேளனத்திடம் கூறினார். எனக்கும் நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறுபவரையே ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சம்மேளன் மறுக்க சுஷில் குமார் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில்: இருவருமே எங்களுக்கு முக்கியம். ஆனால் நர்சிங் யாதவ் தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார். அவருக்கு எப்படி அநீதி இழைக்க முடியும். மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்கள் அனைவருடைய பெயரையும் ஏற்கெனவே அனுப்பிவிட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து சுஷில் குமார் தரப்பு வாதமும் எடுத்து கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூன் 6-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில்குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.