டெல்லி நடைபெறும் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்!!
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் வடகிழக்கு டெல்லியின் பல இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமைக் காவலர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியின் நான்கு பதற்றமான பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு டெல்லியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் மூன்று எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக டெல்லியில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டெல்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.க-வின் சதி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சோனியா காந்தி கூறியதாவது... "டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மையமும் மத்திய உள்துறை அமைச்சரும் பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
டெல்லி தேர்தலின் போதும் இதே போன்று நடந்ததை நாடே பார்த்தது. வன்முறையை தூண்டும் விதமாகவும், அச்சம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர். டெல்லியின் தற்போதைய நிலைக்கு மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சருமே பொறுப்பு. நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், பலர் காயமடைந்த போதும், பலர் உயிரிழந்த நிலையிலும் 72 மணி நேரமாக டெல்லி போலீஸ் கையை கட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
Congress Interim President Sonia Gandhi: The Centre and the Union Home Minister is responsible for the present situation in Delhi. The Union Home Minister should resign. https://t.co/kH3JFsABpw
— ANI (@ANI) February 26, 2020
வடகிழக்கு டில்லியில் உள்ள தெருக்களில் வன்முறை இன்னும் தொடர்ந்து வருகிறது. அமைதியை காக்க தவறிய டில்லி முதல்வர் மற்றும் அவரது அரசிற்கும் சமபங்கு பொறுப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஒட்டுமொத்த தோல்வியே தலைநகரை மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு தள்ளி உள்ளது என அவர் தெரிவித்தார். இரு அரசாங்கங்களின் கூட்டு தோல்விதான் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.