டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், 100-க்கும் மேற்பட்டோர், அதே கட்டிடத்தில் தங்கியிருந்துள்ளனர். இந்த 6 மாடிக் கட்டிடத்தில், இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகு தீ விபத்து நேரிட்டுள்ளது. இதுகுறித்து, 5.22 மணிக்கு, டெல்லி தீயணைப்புத்துறைக்கு, முதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், அங்கு சென்ற டெல்லி தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தின்போது, அபய குரல் எழுப்பியவர்கள், மயக்க நிலையில் இருந்தவர்கள் என, 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே தீயணைப்புத்துறையினரால் மீட்க முடிந்தது. இந்த பயங்கர தீ விபத்தில், 43 பேர் உடல்கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். பலியானவர்களில் பலரும், உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, உயிரிழந்ததாக, டெல்லி தீயணைப்புத்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், லோக் நாயக், ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். செயின் ஸ்டீபன் முதல் ஜான்தேவாலன் பகுதி வரையிலான, ராணி ஜான்சி சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று பாதையில் செல்லுமாறு, வாகன ஓட்டிகளை டெல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மிகவும் கொடூரமான தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறியிருக்கிறார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், அனைத்து உதவிகளையும், அதிகாரிகள் செய்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தலைநகர் டெல்லியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்து குறித்த செய்தி, தம்மை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூறியிருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்றைய தீ விபத்து, மிக, மிக துன்பகரமானது எனத் தெரிவித்திருக்கிறார். மீட்பு பணியை துரிதப்படுத்தி, பலரையும் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர், மிகச்சிறப்பான மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்திருக்கிறார்.
Delhi Police DCP North Monika Bhardwaj: Rehan, the owner of the building against whom a case has been registered under section 304 IPC, is currently absconding. https://t.co/lUIpqvN5DP
— ANI (@ANI) December 8, 2019
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.