Delhi bomb blast: முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியது டெல்லி போலீஸ்

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 08:53 AM IST
  • டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்தது.
  • இது குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
  • டெல்லியைத் தொடர்ந்து மும்பை, உ.பி.-யில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
Delhi bomb blast: முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியது டெல்லி போலீஸ் title=

புதுடெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்தைத் தொடர்ந்து டெல்லி போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். குண்டுவெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆதாரங்களின்படி, இஸ்ரேல் தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பெரிய சதித்திட்டத்தின் சோதனையாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

"குண்டுவெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதற்கான தடயம் தடயவியல் குழுவிடம் கிடைத்துள்ளது. இது அந்த இடத்தில் ஒரு சிறிய பள்ளத்தை ஏற்படுத்தியது. ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன."

சிசிடிவி காட்சிகள், பாதி எரிந்த இளஞ்சிவப்பு ஸ்கார்ஃப் மற்றும் இஸ்ரேல் (Israel) தூதர் பெயரிடப்பட்ட ஒரு உறை ஆகியவற்றை குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து போலீசார் மீட்டுள்ளனர் என்று வட்டாரங்கள் ஏ.என்.ஐ.-யிடம் கூறினர். இருப்பினும், சி.சி.டி.வி யிலிருந்து துல்லியமான உள்ளடக்கங்களை மீட்டெடுப்பது கடினமாகும்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கெஜம் தொலைவில் ஒரு அஞ்சல் உறை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அந்த கடிதம் இஸ்ரேல் தூதரக்கு அனுப்பப்பட்டதாக டெல்லி போலீஸ் (Delhi Police) வட்டாரங்கள் தெரிவித்தன. போலீசார் அதன் கைரேகைகளை எடுத்து அதன் உள்ளடக்கங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

ALSO READ: இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதல் முயற்சி என விசாரணை..!!!

ஜனவரி 29 மாலை, இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட ஒரு குண்டு வெடித்தது (Bomb blast). இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள தூதரகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பல கார்களின் விண்ட்ஸ்கிரீன்கள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடம் விஜய் சௌக்கில் இருந்து வெகு தொலைவில் இல்லை. அங்கு 'ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ‘பீடிங் ரெட்ரீட்’ நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலும் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து விமான நிலையங்கள், முக்கியமான நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை (Mumbai) காவல்துறையினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்திலும் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:Breaking: தில்லியில் குண்டு வெடிப்பு, இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடித்தது குண்டு 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News