நாட்டையே பரபரப்பாக்கியுள்ள ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து சைபராபாத் காவல் ஆணையர் VC சஜ்ஜனர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்க சைபராபாத் காவல் ஆணையர் VC சஜ்ஜனர் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதுதொடர்பாக தெரிவிக்கையில்., "குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 10 நாட்களாக காவல்துறை காவலில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் நாங்கள் விசாரித்தோம். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, சம்பவத்தை புனரமைக்க சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் அவர்களை அழைத்துச் சென்றோம். நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கற்களைப் பயன்படுத்தி எங்களை தாக்க முயன்றனர், எங்கள் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றனர்.
சடமாக இருக்கும் அவர்கள் இன்னும் ஆயுதங்களுடன் கிடப்பதை நீங்கள் காணலாம். இதன் விளைவாக நாங்கள் அவர்களுடன் ஒரு மோதலில் ஈடுபட வேண்டியிருந்தது, அதில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது வெள்ளிக்கிழமை அதிகாலை 5:45 மணி முதல் 6:15 மணி வரை நடந்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., "குற்றம் சாட்டப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்தபோது சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் இருந்தனர், மீதமுள்ளவர்கள் காவல்துறை வாகனங்களில் இருந்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரை குச்சிகளால் தாக்கி, பின்னர் எங்களிடமிருந்து ஆயுதங்களை பறித்தனர், காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
VC சஜ்னார் மேலும் கூறுகையில், "காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர், சரணடையும்படி கேட்டார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம், இந்த சம்பவத்தின் போது அவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். என்கவுண்டரின் போது, இரண்டு போலீசார் காயமடைந்துள்ளனர், அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்." எனவும் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் சைபராபாத் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். "குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக (PME) உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது."
குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட அதே இடத்தில்., பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மொபைல் போனும் மீட்கப்பட்டதாக சஜ்ஜனார் மேலும் தெரிவித்தார்.
சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று கூறிய ஆணையர், கர்நாடக மாநிலத்தில் மேலும் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சந்திப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அறிந்து கொள்வது குறித்து கேட்கப்பட்டபோது, காவல்துறை ஆணையர், "மாநில அரசு, NHRC மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் பதிலளிப்போம்" என தெரிவிதுள்ளார்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் வெள்ளிக்கிழமை காலை காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக நிகழ்வுகளை புனரமைப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை - முகமது, ஜொல்லு சிவா, ஜொலு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவுலு ஆகியோரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் ஷாட்நகரில் இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கால்நடை மருத்துவரின் குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு பிறகு தெலுங்கானா காவல்துறையினரைப் பாராட்டியதோடு, தங்கள் மகளின் ஆத்மாவு தற்போது நிம்மதியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.