காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டத்தில் மோடி அரசை தாக்கி பேசினார்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி, ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்
காரிய கமிட்டியின் கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், தற்போதைய அரசியல் விவகாரங்கள், பொது சிவில் சட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என தெறிவிக்கபட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பொதுமக்கள் மிரட்டபடுகிறார்கள். தற்போது ஜனநாயக இருண்டகாலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. மேலும் அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது ஆபத்தான போக்கு என தெரிவித்தார். மேலும் மோடி அரசு கேள்விகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில் மக்கள், அரசியல் கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை" என்று ராகுல் காந்தி கூறினார்.