ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை அளிக்கும் 377-வது சட்டப்பிரிவை நீக்க கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என 377 வது சட்டப்பிரிவு கூறுகிறது. இதை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, 2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. எனவே, ஓரினச்சேர்க்கை என்பது சட்டப்படி குற்றம் என்ற நிலை தொடர்ந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இயற்கைக்கு மாறான குற்றமாக கருதப்படுகிறது. இதன்படி, வயதுக்கு வந்த இரண்டு ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ, அல்லது விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபட்டாலோ குற்றமாக கருதப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்க முடியும்.
இந்த சட்டப்பிரிவை எதிர்த்து நவ்தேஜ் சிங் ஜோகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் தத்தார் ஆஜரானார்.
9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், ‘அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையின் ஒரு அங்கம்தான்’ கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபர் தனக்கு விருப்பமான பாலியல் கூட்டாளியை தேர்வு செய்துக் கொள்ள முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த சட்டப்பிரிவு பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.
இதன்படி, சுப்ரீம் கோர்ட் தான் ஏற்கனவே பிறப்பித்த ஒரு உத்தரவை மறு ஆய்வு செய்ய உள்ளது. இந்த விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றவும் உத்தரவிடப்படுகிறது.