குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து IPS அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு!!

Last Updated : Dec 12, 2019, 11:01 AM IST
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து IPS அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா! title=

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு!!

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதா வகுப்புவாதத்துடன், அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாக 'எதிர்ப்பு தெரிவித்துள்ள மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளில் மத துன்புறுத்தலால் இந்தியா வந்த இந்து, புத்த, சமண, சீக்கிய, கிறிஸ்வத, பார்சி உள்ளிட்ட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திங்கள்கிழமை லோக்சபாவிலும், புதன்கிழமை ராஜ்யசபாவிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ராஜ்ய சபாவிலும் 125 பேர் இதற்கு ஆதரவும், 105 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் மசோதா சட்டமாகவது உறுதியாகி உள்ளது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அதன்பின்னர் அவர் ஒப்புதல்அளித்த உடன் நிறைவேற்றப்படும்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ராஜினாமா செய்வதாக மும்பைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வகுப்புவாதத்துடனும் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாகவும், இது சட்டத்தை மீறிய செயல் என்றும், இதனால் தான் எந்த பணியையும் தொடரப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் அலுவலகத்திற்கு தான் செல்லப்போவது இல்லை என்றும் ராஜினாமா செய்தவாகவும் ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஆதரவாக ஜனநாயக முறையில் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சகிப்புத்தன்மையுடனும், மதச்சார்பின்மையுடனும் நீதியுடன் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்து மக்கள் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்றும் ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

Trending News