நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் -HD குமாரசாமி!

தமது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 12, 2019, 09:17 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் -HD குமாரசாமி! title=

தமது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட HD குமாரசாமி தமது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மும்பை சொகுசு விடுதியில் தங்கியிருந்த கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பத்து பேர், உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று பலத்த பாதுகாப்புடன் பெங்களூர் விதான் சபாவில் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து மீண்டும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். சுமார் ஒருமணி நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், ராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டதாக கூறினார். 

முன்னதாக ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் சபாநாயகர் தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அளித்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், மின்னல் வேகத்தில் முடிவுகளை எடுக்க முடியாது என்றும், இரவு முழுவதும் இதுகுறித்து சிந்திப்பேன் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

மேலும் 70 வயதாகிவிட்ட தாம் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்றும், தம்மை மோசமானவராக சித்தரிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இறுதிக் காலத்தில் தம்மை நிம்மதியாக சாக விடுங்கள் என்றும் சபாநாயகர் வேண்டிக்கொண்டார்.

எம்எல்ஏ-க்கள் ராஜினாமா குறித்து நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தை அணுகிய சபாநாயகர் காலக்கெடுவை நிறைவேற்ற இயலாது என்றும், ராஜினாமாக்கள் பிறருடைய தூண்டுதலினால் நடந்ததா அல்லது தாமாகவே நிகழ்ந்ததா என்பதை ஆராய மேலும் ஒருநாள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரைவை இன்று கூடுகிறது. ராஜினாமா கடிதங்களை அளித்து விட்டு 14 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் மும்பையில் உள்ள சொகுசு விடுதிக்கே திரும்பியுள்ள நிலையில், அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கொறடா மூலம் காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

எனினும் இன்று முதல் நாள் கூட்டம் என்பதால் மறைந்த தலைவருக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்பதால் கர்நாடக அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு ஏதும் இல்லை என தெரிகிறது.

Trending News