கோவாவில் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது!!

Last Updated : Oct 15, 2016, 09:46 AM IST
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது!! title=

இன்று கோவா தலைநகர் பானாஜியில் பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாடையொட்டி கோவாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநாட்டின் முதல் நாளான இன்று பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக கோவாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவாவை வான் வழியாகவும், கடல் வழியாகவும் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவா கடல் பகுதியில் கப்பற்படை கப்பல்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை கோவா வந்தடைந்தார். இந்நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புடினும் கோவா வந்தடைந்துள்ளார். இந்த மாநாட்டில் 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து ஆக உள்ளது எனத்தெரிகிறது..

Trending News