வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு, உத்திரபிரதேசத்தின் 74 இடங்களிலும் வெற்றி பெரும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்!
மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சிகாலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் ஆம்மாநிலத்தின் முக்கிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில பாஜக தேர்தல் பொறுப்பாரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசினார். அப்போது இந்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வெற்றிப்பெற தொண்டர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி கட்சி கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இக்கூட்டணி மோடியை வீழ்த்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. மக்கள் நலனை கருத்திக்கொள்ளவில்லை. கொள்கைகள் இல்லா கட்சி தேர்தலில் வெற்றி பெறாது, எனவே இக்கூட்டணியை குறித்து நாம் பேச வேண்டியதில்லை என தெரிவித்தார்.