10:56 AM 11/24/2019
சரத் பவாரின் இல்லத்தை விட்டு வெளியேறிய பாஜக MP சஞ்சய் ககாடே இது தனது தனிப்பட்ட சந்திப்பு என்றும், இது அரசியலுடன் எந்த தொடர்பும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக MP சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பை தூண்டியுள்ளது.
நேற்று விடியற்காலை தேசியவாத காங்கரஸ் தலைவர் அஜித் பவாருடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் அஜித் பவார் பொறுப்பேற்றார்.
பாஜகவுக்கு ஆதரவளித்ததால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று இரவு அஜித் பவாரை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Maharashtra: BJP MP Sanjay Kakade arrives at NCP Chief Sharad Pawar's residence in Mumbai. pic.twitter.com/xJgIRPKMdO
— ANI (@ANI) November 24, 2019
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக MP சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பை தூண்டியுள்ளது.
பாஜக MP-யான சஞ்சய் காகடே இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்றார். கடைசி நேரத்தில் அஜித் பவார் பாஜக உடன் கைகோர்த்த நிலையில் சரத்பவாரை சமரசம் செய்ய சஞ்சய் காகடே பவார் வீட்டிற்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வர உள்ள நிலையில் பாஜக MP-யின் திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
--- மகாராஷ்டிராவில் அரசியல் நாடகம் ---
மகாராஷ்டிராவில் நேற்று யாரும் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரும், பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.
பதவியேற்பு நாள் முன் இரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக அடுத்த நாள் காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், NCP கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்(54) தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.