அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய முதலைமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் பயன் பெரும் வகையில் பல அதிரடி அறிவிப்புக்களை அறிவித்து வருகிறார். மேலும் பல மாற்றங்களையும் செய்து வருகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் முறையாக கடந்த மாதம் 30-ம் தேதி ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முதல் முறையாக ஆந்திரா மாநிலத்தில் ஐந்து துணை முதல்வர்களை நியமித்து, அனைவரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். 5 துணை முதல்வர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் கடந்த 5 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நாள் முதல் பல அறிவிப்புக்களை அறிவித்து வருகிறார். அதிகாரிகளும், அமைச்சர்களும் எப்பொழுதும் மக்கள் பிரச்சனை தொடர்ந்து கவனித்து வர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுக்குள் ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஆந்திர மாநிலத்தில் 40,000 அரசுப் பள்ளிகள் உள்ளன என்றும், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதே சமயம் தெலுங்கு கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மாநிலத்தில் 33 சதவீதம் மக்கள் கல்வியறிவற்றவர்கள் உள்ளனர் எனக்கூறினார். இதை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி அறிவு வழங்கப்படும் எனவும் கூறினார்.
அவர் அறிவித்த சில திட்டங்கள்:
> சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தினார்.
> ரையத் பரோசா என்ற திட்டத்தின்படி அனைத்து விவசாயிகளும் ஆண்டிற்கு ரூ. 12,500 சலுகை அளிக்கப்படும்.
> செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என அறிவிப்பு.
> ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு.