மக்களவை தேர்தலுக்கு பின்னர் பாஜக-வை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றுசேரும் என மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜக-விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்திருந்தன.
இந்நிலையில் தற்போது நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைப்பெற்று வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் உள்ள 29 தொகுதிகளுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.
நாங்கள் கொண்டுவந்த நல திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் புல்வாமாவில் நடைப்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது எனவும் கடுமையாக சாடினார்.
நடைபெறும் மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவித்த அவர் தேர்தலுக்கு பின்னர் பாஜக-வை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றுகூடும் எனவும் தெரிவித்தார்.