சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் அரசு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) மாநில சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இரண்டு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மாநில அமைச்சர் பிரம் மோஹிந்திரா, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தார்.
முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இதேப்போன்ற நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Resolution moved by Punjab government against #CitizenshipAmendmentAct has been passed in the state assembly. https://t.co/QZHb7mIIIf
— ANI (@ANI) January 17, 2020
மேலும், திருத்தப்பட்ட சட்டம் இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சம உரிமைக்கான விதிகளுக்கு எதிரானது என்று ஜனவரி 14-ஆம் தேதி, பினராயி விஜயன் தலைமையிலாள கேரள அரசு, CAA-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனு 131-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமானது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவை மீறும் சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தனது மனுவில், கேரள அரசு, அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளையும், இந்தியாவில் மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்பையும் குடியுரிமை திருத்த சட்டம் மீறுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அரசியலமைப்பில் 14-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் உச்சநீதிமன்றம், இது எந்தவிதமான அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக இருந்தால், அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் ஒருவர் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம் (இது ஒரு அடிப்படை உரிமையாகவும் இருப்பது).
பிரிவு 14 அனைவருக்கும் சம உரிமைக்கான வாக்குறுதியை அளிக்கிறது, அதே சமயம் 21-வது பிரிவு 'சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு நடைமுறையின்படி தவிர எந்தவொரு நபரும் தனது வாழ்க்கையையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையோ இழக்கக்கூடாது' என்று கூறுகிறது. பிரிவு 25 'அனைத்து நபர்களும் மனசாட்சியின் சுதந்திரத்திற்கு சமமாக உரிமை உண்டு' என கூறுகிறது.
இதன் மூலம், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய முதல் மாநில அரசு கேரள அரசாக அறியப்பட்டது. இந்நிலையில் தற்போது கேரளா அரசினை பின்தொடர்ந்து கேப்டன் அமரேந்திர சிங் தலைமையிலான பஞ்சாப் அரசும் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.
கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தவிர, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர்..