Delhi News: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதை அடுத்து, டெல்லியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவரது மனைவி சுனிதா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து இருக்கும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன.
பாஜக vs ஆம் ஆத்மி மோதல்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருபுறம், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது அவரது நடவடிக்கைகளின் விளைவு என்று பாஜக கூறி வருகிறது. மறுபுறம் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கும் சதி என்றும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.
டெல்லி திகார் சிறை எண்-2ல் கெஜ்ரிவால்
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் சிறை எண்-2ல் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளார்.
கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதையடுத்து, அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆனால், எவ்வளவு காலம் சிறையில் இருந்தாலும் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், தற்போது ஆம் ஆத்மி கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா நேற்று (திங்கள்கிழமை) கூறுகையில், டெல்லி அமைச்சர்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தற்போது குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் ஆம் ஆத்மி கட்சியை முடக்க முக்கிய தலைவர்களை சிறையில் தள்ள பாஜக பார்க்கிறது எனக் கூறினார். மேலும் டெல்லி மக்களுக்கு சேவை செய்வேன் என அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துள்ளதால், எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட்டாலும் முதல்வராக கெஜ்ரிவால் நீடிப்பார் என்று ஜாஸ்மின் ஷா கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு ஒத்தி வைப்பு
டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்க நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 6 ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.
கெஜ்ரிவாலின் கைது.. அவரது அந்தஸ்து அதிகரித்துள்ளது - ஃபரூக் அப்துல்லா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஃபரூக் அப்துல்லா, "சிறைக்கு சென்ற பிறகு, கெஜ்ரிவாலின் அந்தஸ்து அதிகரித்துள்ளது. தற்போது அவர் முக்கியத் தலைவராகிவிட்டார். இது ஆம் ஆத்மிக்கு பயனளிக்கும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து 13 இடங்களையும் கைப்பற்றும். டெல்லியில் உள்ள 7 இடங்களிலும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வெற்றி பெறும். அதேபோல ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்திலும் ஆம் ஆத்மியின் வெல்வாக்கு அதிகரிக்கும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ