திருப்பதியில் 5 வயது சிறுவன் கடத்தல் - மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருமலை திருப்பதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை பெண் ஒருவர் கடத்தி செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 3, 2022, 03:41 PM IST
  • திருமலை திருப்பதியில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன்
  • சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டை
  • கடத்திய பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என தகவல்
திருப்பதியில் 5 வயது சிறுவன் கடத்தல் - மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு! title=

ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தானமேடு எனும் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணா. இவர் திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்வாதி திருமலைக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் நாமம் இடும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 5 வயது மகன் கோவர்தனுடன் பக்தர்களுக்கு நாமம் இடும் பணியில் ஸ்வாதி ஈடுபட்டிருந்தார். மாலை 5.15 மணிக்கு அங்கு வந்த மர்ம பெண் ஒருவர் ஸ்வாதிக்கு தெரியாமல் சிறுவனிடம் பேசி அவனை சற்று தொலைவுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு சிறுவன் கோவர்தனுக்கு இனிப்புகளை வழங்கி யாருக்கும் தெரியாமல் மிகவும் லாவகமாக சிறுவனை கடத்தி சென்றார். 

பக்தர்களுக்கு நாமமிடும் பணியில் மூழ்கியிருந்த ஸ்வாதிக்கு மாலை 5.45மணியளவில் தான் மகன் கோவர்தன் காணாமல்போனது தெரிந்தது. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் திருமலை 2-வது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், தேவஸ்தான சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, மொட்டையடித்த தலையுடன் உள்ள பெண் சிறுவன் கோவர்த்தனை கடத்திச்சென்றது தெரியவந்தது.

பிங்க் நிற சுடிதார் அணிந்திருந்த அந்த பெண் சிறுவனிடம் மெல்ல பேச்சுகொடுத்து, அவன் கையைப்பிடித்தபடி அங்கிருந்து அழைத்து செல்கிறார். இதன் பின்னர் திருமலை பாலாஜி பேருந்துநிலையத்தில் சிறுவனுடன் பேருந்தில் ஏறிய அந்த பெண் பிறகு திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்குகிறார். 

அதன் பின்னர் அந்த பெண்ணும் சிறுவன் கோவர்தனும் எங்கு சென்றனர் என தெரியவில்லை. ஆனால் போலீஸாரின் தொடர் தேடுதல் வேட்டையில் அந்த பெண் சிறுவனுடன் இரவு இரவு 8.10 மணியளவில் கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கும், அங்கிருந்து 8.50 மணிக்கு விஷ்ணு நிவாசம் யாத்திரை வளாகத்துக்கும் சென்றது தெரியவந்தது. 

மேலும் படிக்க | கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பானியில் காப்பாற்றிய காவல்துறை!

இதைத்தொடர்ந்து திங்கள் கிழமை அதிகாலை 4.05 மணி முதல் 4.30 வரையிலான 25 நிமிட நேரத்தில் அந்த பெண் திருப்பதி ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு நடைமேடை எண் 2 மற்றும் 4-ல் நடமாடியது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு இருவரும் எங்கு சென்றனர் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண் தமிழில் பேசியதாக கூறப்படுவதால் அவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சிறுவன் கோவர்தன் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார் இது தொடர்பாக தகவல் கிடைத்தால் தொடர்புகொள்ள வேண்டிய காவல் நிலைய தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி திருமலை காவல் நிலைய ஆய்வாளர் தொலைபேசி எண்களான 9440796769, 9440796772 ஆகிய எண்களுக்கு தகவல் அளிக்க பொதுமக்களை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | J&K: 2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சிறுவர்கள் கடத்தல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News