உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட சைய்புல்லாக் ஒரு மாதத்திற்கு முன்னதாக என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இப்போது தீவிரவாத தொடர்புக்கு எதிரான நடவடிக்கையின் தொடர்ச்சியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு, ஆந்திர மாநில போலீஸ், பீகார் மற்றும் பஞ்சாப் மாநில போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை, ஜலந்தர் மற்றும் பிஜ்னோரில் சந்தேகத்திற்கு இடமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு செய்தி வெளியிட்டு உள்ளது.
மும்பை அருகே உள்ள மும்பாரா நகரில் தீவிரவாதி என சந்தேகத்தின் பெயரில் ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளார், இதனையடுத்து பிஜ்னோரில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.
போபால் - உஜ்ஜைன் ரெயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சைய்புல்லாக்கை கடந்த மாதம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது. குண்டு வெடிப்பை அடுத்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போலீஸ் ஐ.எஸ். பயங்கரவாத தொடர்புடையவர்களை வேட்டையாடியது.