புதுடெல்லி: டெல்லியில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.
முதலில் பஹர்கஞ்ச் பகுதியில் மாலை 5.25 மணிக்கு ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. 6 மணிக்கு கோவிந்தபுரி பகுதியில் பஸ்சில் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடங்களில் சரோஜினி நகர் சந்தையில் குண்டு வெடித்தது.
தலைநகரை உலுக்கிய இந்த குண்டுவெடிப்புகளில் 67 மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முகமது ரபிக் ஷா, முகமது உசேன் பாஸ்லி, தாரிக் அகமது தார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரிதேஷ் சிங் விசாரித்து, நேற்று தீர்ப்பு அளித்தார். முகமது ரபிக் ஷா, முகமது உசேன் பாஸ்லி ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தார்.
மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த தாரிக் அகமது தார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.