கர்நாடாகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!
கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்காத சபாநாயகர், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததால், கொறடா உத்தரவை மீறியதாக நடப்பு சட்டப்பேரவைக் காலம் முழுமைக்கும் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மநீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதால் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர்கள் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் வராது என்று தெரிவித்துள்ளனர். மேலும், சபாநாயகர் நடுநிலையானவர். எந்த கட்சி சார்பும் இல்லாமல் செயல்படக்கூடியவர். அவர் சுயமாக, தனித்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சபாநாயகர் தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் சார்புகள் இல்லாமல், அதன் குறுக்கீடுகள் இல்லாமல் மனுக்களில் நீதி வழங்க வேண்டும் என்றும், தான் சார்ந்திருக்கும் அரசியல்கட்சியோடு தொடர்பைத் துண்டிக்க முடியாவிட்டால், அவரின் செயல்பாடுகள் நடுநிலைத்தன்மைக்கு விரோதமாக அமைந்து விடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆனால், எந்த வழக்கை எடுத்தாலும், நடுநிலையுடன் செயல்படுதல் என்ற அரசியலமைப்புக் கடமைக்கு எதிராகவே சபாநாயகர்கள் செயல்படும் போக்கு அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
Bengaluru: 15 rebel Karnataka MLAs of Congress and JD(S) joined BJP today in the presence of Chief Minister BS Yediyurappa. 17 MLAs were disqualified by the state assembly speaker KR Ramesh Kumar and their disqualification was upheld by the Supreme Court, yesterday. pic.twitter.com/xznVMPKWaQ
— ANI (@ANI) November 14, 2019
இதற்கிடையே, கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா வரவேற்றிருக்கிறார். தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்எல்ஏக்கள், மீண்டும், பாஜக சார்பில் போட்டியிடுவார்களா? என்பது பற்றி, அவர்களுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும், தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.