ரத்த தானத்தின் செய்வது அவசியம். அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 10 லட்சம் பேருக்கு அவசர நிலையின் போது ரத்தம் கிடைக்காமல், உயிரிழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் 25 கோடி பேர் அவசர நிலையை சந்திக்கின்றனர். இவர்கள் காப்பற்றப்பட வேண்டும் எனில் ரத்ததானம் அவசியம்.
உலகளவில் ஆண்டுக்கு 11.2 கோடி பேர் மட்டும் ரத்த தானம் செய்கின்றனர். இதில் சரிபாதி, அதிக வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக வருமானம் உடைய நாடுகளில், 1000 பேரில் 32 பேர் ரத்ததானம் செய்கின்றனர்.
நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் 15 ஆக உள்ளது. ஏழை நாடுகளில் 5 ஆக உள்ளது. தானாக முன்வந்து இலவசமாக வழங்குதல், உறவினர்களுக்காக வழங்குதல், பணத்துக்காக வழங்குதல் என மூன்று வழிகளில் ரத்ததானம் வழங்கப்படுகிறது.
நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.
ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் சோதனை செய்த பின் ரத்ததானம் செய்ய வேண்டும்.
சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது 350 மி.லி., ரத்தம் மட்டுமே உடம்பில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதுவும் இரு நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடுகிறது. இரு மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும் ரத்த தானம் செய்யும் போது சீரடைகிறது.
ஒரு ஆண்டுக்கு பெண்கள் 3 முறையும், ஆண்கள் 4 முறையும் ரத்ததானம் செய்யலாம்.