ராஜஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல்...

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Jan 27, 2020, 03:43 PM IST
ராஜஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல்... title=

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

நோயாளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்குமாறு மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் MBBS படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அரசு மருத்துவமனை தனிமை வார்டுக்கு மாற்றவும், குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்யவும் SMS மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நோயாளியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை புனேவின் தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"கிடைத்த தகவல்களின்படி, மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 18 பேர் சீனாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர். நான்கு மாவட்டங்களின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகள் அனைவரையும் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று சர்மா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில்., சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வரும் நபர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை முழுமையாக திரையிட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 80 ஆக உயர்ந்தது. அங்கு 2,684 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைத்து திட்டங்களையும் இந்திய அரசாங்கமும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகமும் பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக அங்கு உள்ள மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் இருப்பதாக இளைஞர் ஒருவர் சந்தேகிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News