ஆலந்தூர்: சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. அது சந்திரனுக்கு அருகே சென்று சுற்றியபடி, சந்திரனை பற்றிய பல தகவல்களை பூமிக்கு அனுப்பியது.
அதையடுத்து சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் ரூ.800 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தை அடுத்த மாதம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இது பற்றி விண்வெளி ஆய்வுத்துறை இலாகாவை கவனிக்கும் பிரதமர் அலுவலக விவகார துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கடந்த 16-ந் தேதி நிருபர்களிடம் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும், அதில் உள்ள இறங்கு வாகனம் சந்திரனின் தென் பகுதியில் தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது....!
சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்திய நிபுணர்கள், விண்கலத்தில் மேலும் சில சோதனைகளை நடத்த யோசனை தெரிவித்து உள்ளனர். எனவே ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.ஐ.ஆர்.என்.எஸ். செயற்கை கோள் ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கிறது. வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ஜி.சாட்-6 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் செயலி தயாராகிக்கொண்டு இருக்கிறது. மீனவர்கள் பயன்படுத்துகின்ற வகையில் இது ஏப்ரல் மாதம் வழங்கப்படும்.நமது நாட்டிற்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக தற்போதைய பாடத்திட்டங்களை மாற்ற தேவையில்லை. மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என அவர் கூறினார்.