உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916)-ல் பிறந்தார். இவர் இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கமருதீன். ஆனால், அவரது தாத்தா, அவரை பிஸ்மில்லா என்று அழைத்தார். பிற்காலத்தில் அந்த பெயரே நிலைத்து விட்டது.
பிஸ்மில்லா கானின் முன்னோர்கள் அரண்மனை இசைக்காரர்கள் ஆவார்கள். அவருடைய மாமா காசி விசுவநாதர் ஆலயத்தில், அலிபக்ஸ் இசைச் சேவையில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 வயது குழந்தையாக இருந்த பிஸ்மில்லா அதை மெய்மறந்து கேட்டார். பிறகு அவருடைய மாமா கங்கைக் கரையோரம் உள்ள பாலாஜி ஆலயத்தில் இவருக்கு ஷெனாய் பயிற்றுவித்தார்.
மாமா இறந்த பிறகு தானாகவே பயிற்சி செய்து தும்ரி, சைத்தி, கஜ்ரி, ஸவானி ஆகிய இசை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர், கயால் இசையிலும் வல்லுநர் ஆனார். கொல்கத்தாவில் 1937-ல் நடந்த தேசிய இசை மாநாட்டில் தனது அற்புத இசையால் அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர், எழுபது ஆண்டுகள் இசைப்பணியில் ஈடுபட்டார். அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார். பிஸ்மில்லா கானுக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
பிஸ்மில்லா கானுக்கு பனாரஸ், சாந்தி நிகேதன் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சங்கீத நாடக அகாடமி விருது முதல் பத்மபூஷண் வரை ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 2001-ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
1947-ல் இந்திய சுதந்திரம் செங்கோட்டையில் இவரது இசையுடன்தான் பிறந்தது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசு தின விழாவிலும் இவரது இசை இடம்பெற்றது. தேசிய அளவிலான முக்கிய விழாக்கள் எதுவும் இவரது இசை இல்லாமல் நடந்ததில்லை. பிஸ்மில்லா கான் அன்னை கங்கா என்று கங்கையைப் போற்றியபடி தன் வாழ்நாள் முழுவதும் காசியில் கழித்தவர்.
உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞராக விளங்கிய உஸ்தாத் பிஸ்மில்லா கான் 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தனது 90 வயதில் மறைந்தார்.
அவரை போற்றும் வகையில் அவரது 102-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட "கூகிள் டூடுல்" கொண்டாடி மகிழ்கிறது.
#Google pays homage to #UstadBismillahKhan with doodle
Read @ANI story | https://t.co/Rp2DpWtb6N pic.twitter.com/BFtrhztMoa
— ANI Digital (@ani_digital) March 21, 2018