ஆர்.கே நகரில் சொல்லியடித்த டிடிவி தினகரனின் தற்போதைய சவால்கள் தவிடுபிடி ஆனது அமமுக-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. தமிழக அரசியலில் பெரியதொரு மாற்றம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே மும்முனை போட்டி நிலவுவதாக பரவலாக பேசப்பட்டன. அதற்கு ஏற்றவாறு தமிழக அரசியல் களத்திலும் பரப்புகள் நிலவின.
அவ்வாறே வாக்குப்பதிவு நடைப்பெற்று, வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் வரை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் நகர்வுகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வரும் தருவாயில் அவரது கட்சி வேட்பாளர்கள் ஒருவரும் சொல்லிக்கொள்ளும் படி வாக்குகள் பெற வில்லை.
ஒன்றிரண்டு தொகுதிகளில் மிகவும் பின் தங்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஒரு இடத்தில் இன்னும் முன்னிலை பெறவில்லை. இது டிடிவி தினகரன் மற்றும் அவரது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பரப்புரையின் போது 22-க்கு 22 தொகுதிகள் வெற்றி பெறுவோம் என தீர்க்கமாக கூறிய அமமுக-வினரின் நிலைமை தற்போது தலைகீழாக மாறியிருப்பது வேட்பாளர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது