சிவகங்கை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தங்கள் உடல் நிலை, ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப்படமாலம், தலைவர்கள் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் (Assembly Election) பல விதங்களில் மாறுபட்டுள்ளது. பல புதிய பெயர்களும் புதிய கட்சிகளும் அரசியல் அரங்கில் நுழைந்துள்ள காரணத்தால், இந்த தேர்தல் பல சுவாரசியங்கள் நிறைந்ததாக உள்ளது. புதிதாக வந்துள்ள கட்சிகளால், எடுத்த எடுப்பிலேயே பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்று கூற முடியாது என்றாலும், கண்டிப்பாக வழக்கமான வாக்கு வங்கியில் இந்த கட்சிகளால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
இந்நிலையில், தமிழக மக்களின் நலனுக்கு, இங்கு அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வெண்டியது மிக முக்கியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) கூறியுள்ளார். உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவல்ல தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியும், அதிக அளவில் வாக்கு வங்கியை வைத்துள்ள கட்சியுமான அதிமுக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். அதேபோல் திமுக-வும் அனைவரும் கணித்தது போலவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது.
ALSO READ: Cook with MLA: சிக்கன் 65 சமைத்து மக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்
காங்கிரசைத் தவிர திமுக-வின் (DMK) கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக அதிகாரத்தில் இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதிமுக-வின் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இல்லாமல் அக்கட்சி போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இம்முறை கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் வேகத்துடன் களத்தில் பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கிய இரு கட்சிகளாக இருக்கும் இவ்விரு கட்சித் தலைவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
இரு கட்சிகளின் பெரிய தலைவர்களும் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகவும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அவருக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார். பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை” என்று கூறினார்.
ALSO READ: வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா; எதிர்கட்சிகளின் வாதம் சரியானதா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR