கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பா, நியுமராலஜி அடிப்படையில் தனது பெயரினை Yediyurappa என பெயர் மாற்றிக் கொண்டார்!
கர்நாடகாவில் HD குமாரசாமி தலைமையிலான ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு உதவியுடன் கவிழ்க்கப்பட்டதை அடுத்து எடியூரப்பா நான்காவது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றார்.
நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வர் பதவியேற்ற போதிலும், இதுவரை அவர் முழுமையாக முதல்வர் பதவி வகித்ததில்லை. 2007-ஆம் ஆண்டு வெறும் 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா, 2008-ஆம் ஆண்டில் மீண்டும் பதவியேற்று மூன்று வருடங்களுக்கு மேல் பதவியிலிருந்தார். பின்னர் கடந்த 2018-ல் மூன்றாவது முறையாகப் பதவியேற்ற அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 6 நாட்களில் பதவியை இழந்தார்.
இந்த முறையும் தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆண்டு முடிந்த பிறகே முதல்வராகியிருக்கிறார். எனவே நடப்பு ஆட்சியிலும் அவர் 5 ஆண்டு முழுமையாக முதல்வராக பதவி வகிக்க வாய்ப்பில்லை.
இது ஒரு புறம் இருக்க, இதற்கிடையில் தனது ஆட்சி மீண்டும் கவிழ்ந்து விட கூடாது என ஜோதிடத்தின் உதவியை நாடியுள்ளார் எடியூரப்பா. அதன் படி தனது பெயரின் ஆங்கில எழுத்துகளில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளார் எடியூரப்பா.
பி.எஸ் எடியூரப்பாவின் முழுப்பெயர் புக்கனகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா ஆகும். இந்நிலையில் தற்போது தனது பெயரினை ஆங்கிலத்தில் Yediyurappa மாற்றியுள்ளார்.
முன்னதாக 1980-களில் அவரது பெயர் Yadiyoorappa என இருந்தது. 1990-களில் Yediyurappa என மாற்றினார். பின்னர், 2000-ம் ஆண்டில் நியூமராலஜி அடிப்படையில் Yeddyurappa என எழுத்துகளை மாற்றினார். தற்போது மீண்டும் Yediyurappa என்ற பெயருக்கே திரும்பியுள்ளார். எடியூரப்பாவின் பெயர் மாற்றம் அவருக்கு சாதகமாய் அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்த்திருக்கவேண்டும்.