தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய அரசு அனுமதியளித்து இருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்த எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தப்படும் தமிழக மக்களின் எதிர்ப்பையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களையும் துச்சமென மதித்து, தூரத்தில் தூக்கியெறிந்து விட்டு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய பா.ஜ.க. அரசு அராஜகமாக அனுமதியளித்து இருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடம் கருத்து கேட்காமல், சுற்றுப்புறச்சூழல் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாதிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, பாதுகாப்பற்ற ஒரு திட்டத்திற்கு, மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பதும், முல்லை பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் தண்ணீரை, இந்தத் திட்டத்திற்காக எடுத்துக் கொள்ள அனுமதித்து இருப்பதையும், சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகவே கருதுகிறேன்.
நியூட்ரினோ திட்டம்: தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதி - வைகோ கண்டனம்
மக்களின் நலனை பாதிக்கும், குறிப்பாக தேனி மாவட்ட மக்களை பேரிடர் அபாயத்துக்கு உள்ளாக்கும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும் முன்பு, மாநிலத்தில் உள்ள அரசை மத்திய அரசு கலந்து ஆலோசித்ததா? மாநில அதிமுக அரசு இத்திட்டத்தின் பொருட்டு மத்திய அரசுக்கு அளித்த கருத்துகள் என்ன? அப்படி கலந்து ஆலோசிக்கவில்லை என்றால், அதிமுக அரசு வழக்கம் போல தமிழ்நாட்டு நலனை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு, வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இதற்குத் தமிழக மக்களிடம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு, தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற வேண்டுமென்று, இப்போது மத்திய சுற்றுப்புறச்சூழல் குழு அனுமதியில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. முக்கியமாக, ‘குறிப்பிட்ட நிபந்தனை’ (Specific Condition) என்றே கூறியிருக்கிறது. இதே அனுமதியில், “மலையைத் தகர்க்கும் பணிகளில் ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”, என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் அனுமதியை எதிர்த்து, 30 நாட்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தகர்க்கும்போது ஏற்படும் ஆபத்துகள்”, என்று சுற்றுப்புறச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் மக்களுக்கும், மலைகளில் வாழும் உயிரினங்கள், அபூர்வமான தாவரங்கள் அனைத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை மத்திய சுற்றுப்புறச்சூழல் குழுவே எதிர்பார்க்கிறது. ஆகவே, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது. அதை முதலமைச்சர் முன்கூட்டியே உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்தவொரு திட்டமும் மக்களுக்கு பாதுகாப்பானதா என்பதுதான் முதல் கேள்வி. “வளர்ச்சி” என்ற ஒற்றைப்புள்ளியை ’மாய மான்’ போலக்காட்டி, மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் வேட்டு வைக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதனை அதிமுக அரசும் தட்டிக்கேட்காமல் இருப்பது சிறிதும் சகித்துக் கொள்ள முடியாத, பொறுப்பற்ற செயலாகவே அமைந்திருக்கிறது.
ஆகவே, மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியை எதிர்த்து, அதிமுக அரசு தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதில் உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையைத் தடைசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.