கந்த சஷ்டி தரிசனம்: மூலவராக வேலாயுதம் வீற்றிருக்கும் இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில்!!

பிரதான சன்னதியில் கர்ப்பகிரகத்தில் வேலாயுதம் உள்ளது. இங்கு முருகர் வேலாகத்தான் கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2020, 04:09 PM IST
  • ஆகஸ்டு மாத இறுதியில் இக்கோயிலின் புகழ்பெற்ற 25 நாள் திருவிழாவைக் காணலாம்.
  • நல்லூர் காந்தசாமி கோயில் இலங்கையின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும்.
  • கந்தர் சஷ்டி, தை கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகியவையும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கந்த சஷ்டி தரிசனம்: மூலவராக வேலாயுதம் வீற்றிருக்கும் இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில்!! title=

‘வேல்’ இருந்தால் வேறென்ன வேண்டும், வேலவன் அருள் இருந்தால் வினையெல்லாம் நீங்கும். பண்டைய காலம் தொட்டு, நம் மரபில் பின்னிப்பிணைந்துள்ளது நம் வேலவன் முருகனின் மகிமை. வேல் கொண்டு அவன் நின்றால் வினைகள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடும் என்பது நாம் கண்கூடாகக் கண்டுவரும் உண்மை.

நம் நாட்டை பலர் ஆண்டு, நமது பல உண்மைகளை ஊசலாடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். ஆட்சி புரிந்த அயலவர்கள் எல்லோரும் சென்றுவிட்ட போதிலும், அவர்கள் விட்டுச் சென்ற சில வீண் சித்தாந்தங்களை இங்குள்ள சிலர் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை. தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள பல சடங்குகளையும் மரபுகளையும் கேள்வி கேட்பது அறியாமையின் உச்சக்கட்டம்.

தமிழ்க் கடவுளான முருகனின் வேலுக்கு தமிழகத்தில் வராத சோதனையா? இருப்பினும் நம் அண்டை நாடான இலங்கையில் உள்ள ஒரு கோயிலில் வேலே மூலக் கடவுளாக, மூலவராக காட்சியளிக்கும் அழகு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில் நீண்ட நெடிய வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. கடற்கரை மணலில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான கோயிலில் கர்ப்பகிரகத்தில் மூலவராய் வீற்றிருப்பது முருக பெருமானின் வேலாயுதம் தான்!! இதுவே இக்கோயிலின் சிறப்பம்சமாகும். வேலாயுதத்தை இங்குள்ள மக்கள் மிகுந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள்.

இந்த கோயிலில் எப்போதும் ஒரு வகையான அமைதி நிலவுகிறது. மனதிற்கு தேவைப்படும் அமைதி இக்கோயில் பிராகாரங்களில் கிடைக்கின்றது என்பது பலர் கண்கூடாகக் கண்ட உண்மை.

வரலாறு

இக்கோயில் முதலில் கி.பி 948 இல் கட்டப்பட்டது. இருப்பினும், இது 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னர் கலிங்க மஹாவின் அமைச்சர் புவனேகா வாஹுவால் மீண்டும் கட்டப்பட்ட பின்னர் இன்னும் பிரபலமானது. நல்லூர் யாழ்ப்பாண (Jaffna) மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது. இது ஒரு தற்காப்பு கோட்டையாகவும் புகழ் மிக்க நகரமாகவும் இருந்தது. நீதிமன்ற கட்டிடங்கள், அரண்மனைகள், வணிகங்க அங்காடிகள் என பலவித கட்டிடங்கள் அந்த காலத்திலேயே நல்லூரில் இருந்தன.

கோயில் வடிவமைப்பு

இந்தியாவின் பண்டைய கோயில் நகரங்களான மதுரை மற்றும் பாடலிபுத்ர கட்டிட வகையின் அடிப்படையில் இக்கொயிலும் கட்டப்பட்டுள்ளது. நல்லூர் நகரம் இந்த கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது.

நகரத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொரு நுழைவாயிலிலும் கோயில்கள் இருந்தன.

நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு செல்லும் வழிமுறைகள்

வழக்கமாக தென்னிந்திய கோயில்களில் பின்பற்றப்படும் பூஜை முறைகள்தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன. பூக்கள், பழங்கள், கற்பூரம் ஆகியவற்றை நீங்கள் சன்னதிகளுக்கு எடுத்துச் செல்லலாம். கோயிலுக்கு எதிரே உள்ள கடைகளிலிருந்து இவற்றை வாங்கலாம். கற்பூரம் மற்றும் தூபம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சன்னதியில் கொடுக்கும் முன்னர் வெளியே கழுவி சுத்தம் செய்யும் பழக்கம் இங்கே உள்ளது.

கோயிலுக்குள் ஆண்கள் இடுப்பு மட்டத்திற்கு மேல் வேறு எந்த ஆடைகளையும் அணிய அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் முறையான மற்றும் முழங்கால் நீளத்திற்குக் கீழே வரும் ஆடைகளைதான் அணிய வேண்டும். கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க மொபைல் போன்களை இங்கே ஆஃப் செய்து வைக்க கோரப்படுகிறது.

ALSO READ: இலங்கையின் தென் கோடி முதல் வட கோடி வரை அழகாய் அமைந்திருக்கும் 5 சிவாலயங்களின் தரிசனம்!!

பூஜைகளுக்கான டிக்கெட்டுகள் வெறும் ரூ .1.00 க்கு விற்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக இந்த விலைதான் உள்ளது. பண்டைய மந்திரங்களுடன் வண்ணமயமான பூஜைகளை அவதானிக்க நீங்கள் சில டிக்கெட்டுகளை வாங்கி சன்னதிகளில் உள்ள பூசாரிகளுக்கு வழங்கலாம்.

கோயிலுக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் பக்தர்கள் பொதுவாக பிரதான நுழைவாயிலைத் தான் பயன்படுத்துவார்கள்.

பிரதான சன்னதியில் கர்ப்பகிரகத்தில் வேலாயுதம் உள்ளது. இங்கு முருகர் (Lord Muruga) வேலாகத்தான் கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார்.

நீங்கள் இங்கே வழிபாடு செய்து பூஜை செய்யலாம். பிரசாதமாக விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இங்கே வழங்கப்படுகின்றது. இந்த கோவிலில் பல இனங்களையும் மதங்களையும் வணங்குபவர்கள் அடிக்கடி வருகிறார்கள். கோயில் வளாகத்தில், விநாயகர், வள்ளி, தெய்வானை மற்றும் சிவபெருமான் என இன்னும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன.

கோயிலுக்கு வெளியே வந்தால் அழகிய கோயில் ரதத்தை நீங்கள் காணலாம். பண்டிகைக் காலங்களில் இந்த தேர் வீதி உலா வருகிறது.

ஆகஸ்டு மாத இறுதியில் நீங்கள் அங்கு சென்றால், இக்கோயிலின் புகழ்பெற்ற 25 நாள் திருவிழாவைக் காணும் அதிர்ஷ்டசாலியாவீர்கள். இந்த புகழ்பெற்ற மற்றும் வண்ணமயமான திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

திருவிழாவின் போது தவறவிடக்கூடாத சிறப்பு நிகழ்வுகளில் மஞ்சம், கைலாசவாஹனம், வெள்ளிவிமானம், தண்டாயுதபாணி உற்சவம், சப்பரம், தேர் திருவிழா, தீர்த்தம் எனப்படும் நீர் வெட்டும் திருவிழா மற்றும் திருகல்யாணம் ஆகியவை அடங்கும். இந்த திருவிழாவின் போது முழு நகரமும் உற்சாகத்துடன் பண்டிகை கோலம் பூண்டுகொள்கிறது.

இங்கு கொண்டாடப்படும் மற்றொரு பிரபலமான நிகழ்வு திருக்கார்த்திகை ஆகும். இது நவம்பர் நடுப்பகுதியில் நிகழ்கிறது. இந்த திருவிழாவிலும் பலர் கலந்துகொண்டு முருகனருள் பெறுகிறார்கள். இது தவிர, கந்தர் சஷ்டி, தை கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகியவையும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

நல்லூர் காந்தசாமி கோயில் இலங்கையின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலைப் பாராட்டி உலகம் முழுவதிலும் உள்ள பல பழங்கால நூல்களில் பாடல்களும் உரைகளும் உள்ளன. 

ALSO READ: Maths-ல் நூற்றுக்கு நூறு வாங்க, இந்த கோயிலுக்கு வாங்க! 100/100 நிச்சயம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News