காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
அதேசமயம் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது, இதனையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் கவர்னர் எடுத்துரைக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். வரும் 3 ம் தேதி காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கவர்னருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.