தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?

Share Market Tips: நேற்று வெளிவந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்ததால், பங்குச் சந்தையில் பீதி ஏற்பட்டது. சென்செக்ஸ் 4390 புள்ளிகளும், நிஃப்டி 1379 புள்ளிகளும் சரிந்தன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2024, 10:42 AM IST
  • அரசின் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை.
  • அரசியல் சித்தாந்தம்.
  • பொருளாதார கொள்கைகள்.
தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு? title=

Share Market Tips: ஜூன் 1ம் தேதி மாலை, 2024 மக்களவைத் தேர்தல்களின் எக்சிட் போல் முடிவுகள் வந்ததையடுத்து, ​​திங்கள்கிழமை பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்தது. திங்கள்கிழமை சந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2507 புள்ளிகளும், நிஃப்டி 733 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. ஆனால் அடுத்த நாளே, அதாவது நேற்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்ததால், பங்குச் சந்தையில் பீதி ஏற்பட்டது. சென்செக்ஸ் 4390 புள்ளிகளும், நிஃப்டி 1379 புள்ளிகளும் சரிந்தன. 

சந்தையில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய சரிவால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தரவுகளின்படி, என்டிஏ (NDA) 350 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்களும், இந்திய கூட்டணிக்கு 234 இடங்களும் கிடைத்தன. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் காணப்படுவது ஏன்? யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கும் பங்குச் சந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அரசின் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை

தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசாங்கம் வரும்போதெல்லாம், முதலீட்டாளர்களுக்கு மத்தியில் வரவிருக்கும் அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகள் குறித்து நிச்சயமற்ற நிலை இருக்கும். புதிய அரசாங்கத்தின் பொருளாதாரப் போக்குகள், தொழில்களுக்கான ஆதரவு மற்றும் சாத்தியமான சட்ட மாற்றங்கள் குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தொடங்குகிறார்கள். முதலீட்டாளர்களின் இந்த கவலை பங்குச் சந்தையில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இம்முறை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும். வலுவான அரசாங்கம் எப்போதும் பங்குச் சந்தையை பலப்படுத்துகிறது.

அரசியல் சித்தாந்தம்

வெவ்வேறு அரசியல் கட்சிகள் வெவ்வேறு பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழில்துறையின் மீது நாட்டம் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என சந்தை கருதினால், முதலீட்டாளர்கள் சில சமயங்களில் பதட்டமடைகிறார்கள். இதனால் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையின் அச்சத்தால், பங்குகளை வாங்காமல், தங்களிடம் இருக்கும் பங்குகளை அதிக நஷ்டப்படாமல் விற்றுவிட்டு வெளியே வர முயற்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், பல முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பங்குகளை விற்பதால், பங்குச் சந்தையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படுகின்றது. நேற்று பொதுவான கணிப்புகளுக்கு தலைகீழாக காலை முதலே முடிவுகள் வரத் தொடங்கியதால், பங்குச்சந்தையில் பல பங்குகளில், குறிப்பாக பொதுத்துறை மற்றும் வங்கி பங்குகளின் விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

பொருளாதார கொள்கைகள்

தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் பங்குச் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரசாங்கக் கொள்கைகள் சந்தையை ஆதரித்து, தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தினால், அதன் விளைவு பங்குச் சந்தையின் எழுச்சியில் காணப்படுகிறது. ஆனால் கொள்கைகள் தொழில்களுக்கு சாதகமாக இல்லாமல் அதிக வரிகளை விதித்தால் பங்குச்சந்தை வீழ்ச்சியடையும். பொருளாதாரக் கொள்கைகள் தொழில்துறையை ஆதரிக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பங்குச் சந்தை வேகமாக வளர்கிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மதிப்பீடு செய்தபின்னரே முதலீடு செய்கின்றனர். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வரவிருக்கும் அரசாங்கம் நிலையற்றது என்றும், கொள்கை மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் கருதினால், அவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறக்கூட்டும். இது பங்குச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தி பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றது. 

இது தவிர, உலகப் பொருளாதார நிலை, வட்டி விகிதங்கள், பணவீக்க விகிதம் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் ஆகியவை பங்குச் சந்தையின் இயக்கத்தை பாதிக்கின்றன. தேர்தல்களைத் தவிர, மற்ற காரணிகளும் பங்குச் சந்தையில் எதிர்மறையான மற்றும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நேற்றைய தேர்தல் முடிவுகளில் முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நாட்டில் (கூட்டணி இல்லாத) ஒரு வலுவான அரசாங்கத்தின் சமிக்ஞை கிடைத்திருந்தால், சந்தை வேகம் பெற்றிருக்கலாம். ஆனால், கூட்டணி ஆட்சிக்கான குறிப்புகளே நேற்று துவக்கம் முதல் தெரிந்துகொண்டு இருந்தது. இது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், கூட்டணி அரசும் வலுவான ஒரு அரசாக அமைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளுன் உள்ளன. கூட்டணி அரசிலும் வலுவான பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படலாம். ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அடுத்த கூட்டணி அரசாங்கமும் அப்படி ஒரு வலுவான அரசாங்கமாக இருந்தால், பங்குச் சந்தையில் எந்த தோய்வும் இருக்காது. வலுவான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News