மத்திய உள்துறை அமைச்சகம் மேகாலயா மாநிலத்தில் இருந்து AFSPA சட்டத்தை பின்வாங்குவதாக தெரிவித்துள்ளது. அதேநேரம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கணிசமான பகுதிகளில் இருந்தும் AFSPA பின்வாங்கப்படுகிறது.
இந்திய ராணுவ விசேஷ அதிகாரங்கள் சட்டப்படி (AFSPA), பதற்றமான சூழ்நிலையில் உள்ள பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படும். வாரண்ட் இல்லாமல் ரெய்டு செய்வது, கைது செய்வது, சட்டத்தை பின்பற்றாதவர்களை சுடுவது போன்ற பல அதிகாரங்கள் இதில் அடங்கும்.
ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது அமலில் உள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் காரணமாக இந்த சட்டத்தை பின்வாங்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.
இதில் மணிப்பூரை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா குறிப்பிடத்தக்கவர். அசாம், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில், இந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு பகுதிகளில் தீவிரவாத செயல்கள் குறைந்து வருவதை தொடர்ந்து, AFSPA சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. திரிபுரா மாநிலத்தில் இருந்து 2015ம் ஆண்டு நீக்கப்பட்ட பின், தற்போது மேகாலயாவில் இருந்து முற்றிலும் AFSPA-வை நீக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில், 8 காவல் நிலையங்களை தவிர மற்ற இடங்களில் இருந்தும் படைகளை பின்வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருணாச்சலில் பதற்றமான 3 பகுதிகளில் AFSPA நீட்டிக்கப்பட்டுள்ளது.