சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், இரண்டு வாரங்களாகக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில், அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால், போர் நிறுத்தத்தை மீறி சிரியா இன்று, டமாஸ்கஸ்சுக்கு அருகில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நிறைந்த கிழக்குக் கூட்டா பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 11 குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டதாகச் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 15 நாட்களாக இந்தப் பகுதியில் நடந்துவரும் தாக்குதலில் இதுவரை 690 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிரிய ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால், கூட்டா பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் பொதுமக்கள் அதிக அளவு வெளியேற துவங்கிய நிலையில், நேற்று தொடர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 78 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் கூட்டாவின் க்பார் பட்னா என்ற பகுதியில் அரசு படைகளின் தாக்குதல்கள் மையம் கொண்டன. கடந்த 3 வாரங்களில் சுமார் 1500 பேர் கூட்டா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்திய நிலையில், அதை மதிக்காமல் சிரிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
#Russia denies airstrikes on Syria's eastern Ghouta
Read @ANI Story | https://t.co/o7hJhfBdqV pic.twitter.com/0uSvvDfbkG
— ANI Digital (@ani_digital) March 16, 2018