சீரழிந்த ஒரு நாட்டைக் கை காட்டுவதற்கு உதாரணமாக இலங்கை ஆகிவிட்டது. பொருளாதார நெருக்கடியில் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்ட இலங்கையின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அங்கு வாழும் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒரு தேசத்திற்கு இந்த நிலை எப்போதும் வரக்கூடாது. வெறும் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்ய - உக்ரைன் போர் மட்டுமே முழுமையாக இதற்கு காரணம் என சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தத்துவ நிலைப்பாடும், அரசியல் அமைப்புச் சட்டமும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆளுமைகளும், தலைமைகளுமே ஒரு தேசத்தின் தரத்தை நிர்மாணிக்கின்றன. இவையெல்லாம் சாத்தியமாயிற்றா இலங்கையில் ? அத்தகைய சூழலை வளர்த்து எடுத்ததா இலங்கை ?
இலங்கையின் கதி ?
இலங்கையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி, பழங்கள், காய்கறிகள் தவிர பெரும்பாலான பொருட்கள் இறக்குமதியை நம்பியே இருக்கின்றன. இதனால், அந்த நாட்டின் அந்நியச் செலாவணி மிகவும் குறைவு. பெரும்பாலும் சுற்றுலாவையே அந்த நாடு நம்பியுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் அந்நாட்டு அரசு கோட்டைவிட்டது. பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை மாறிமாறி ஆட்சி செய்த எந்த அரசுகளும் எடுக்காததன் விளைவுதான் இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணம் என அந்நாட்டு ஆய்வாளர்கள் புலம்புகின்றனர். இந்தியா, வங்கதேசம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் கடன் கேட்கும் நிலைக்குச் சென்ற இலங்கை, உலக நாடுகளிடமும் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டது. ஒருவேளைக் கடன் பெற்றாலும் அதனை எப்படி திரும்ப செலுத்தப்போகிறது என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்
மொத்தச் சுமையும் மீண்டும் இலங்கை மக்களின் மீதே சுமத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, அத்தியாவசிய பொருட்களான காய்கறி விலைகள் கள்ளச்சந்தையில் விற்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.4500 விற்கப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.280-க்கும் விற்பனையாகிறது. ரூ.1200-ஆக இருந்த சிமென்ட் விலை ரூ.3000 ஆக அதிகரித்துள்ளது. ஒரு முட்டையின் விலை 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால் எந்தளவுக்கு சாமானிய மக்களின் நிலைமை மோசமடைந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களின் விலையையும் இலங்கையில் வியாபாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு தீர்மானிக்கின்றனர். இலங்கையின் எதிர்கால தலைமுறைகளை சிந்தித்துப் பார்க்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொதுமக்கள் கண்ணீர் மல்க புலம்புகின்றனர்.
பிரிவினைவாத அரசியல் தந்த பரிசு!
சுதந்திரத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். இங்கிலாந்திடம் இருந்து விடுதலைப் பெற்றவுடன் இந்தியா குடியரசு நாடாக மாறியது. ஆனால், இலங்கை அப்படி மாறவில்லை. டொமினியன் நாடாக திகழ அது முடிவு செய்தது. 1972ம் ஆண்டு வரை இங்கிலாந்து ராணி எலிசபெத், அதன் தலைவராக இருந்தார். இந்தியாவைப் போல் ஆளுமைமிக்க தலைவர்கள் இலங்கையில் இல்லாத காரணத்தால் பெரிதான எந்த மாற்றமும் அங்கு நிகழவில்லை. எனவே, சிங்கள - பௌத்த குடியரசாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது இலங்கை. புத்த மதத்தையே அது தூக்கிப் பிடித்தது. பிற மதங்களை புறம் தள்ளியது. அதற்கேற்ப அதன் அரசியல் சாசன வடிவமைப்பையும் அமைத்தது. இந்த இடத்தில் இருந்துதான் இலங்கை தனது அழிவுப்பாதையை துவக்கியது. புத்த மதத்தையும், சிங்களத்தையும் மட்டும் அரசியல் சாசனம் தூக்கிப் பிடித்ததால், உள்நாட்டுப் போர் வெடித்தது.
மேலும் படிக்க | இலங்கையில் தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகிறாரா?
தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடத் தொடங்கி வீதியில் இறங்கினர். ஆங்காங்கே கலவரங்கள் உண்டாகி, பெரும் போர் வெடித்து, கடைசியாக இனப்படுகொலையில் முடிந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகாரத்தை அழித்ததன் மூலம் சிங்களவர்களின் பேராதரவு பிம்பத்தை ராஜபக்சே பெற்றார். இதற்காக, அவருக்கு பெரும்பான்மையை பரிசாக அளித்தனர் இலங்கை மக்கள். பெரும்பான்மை என்பது ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, எப்போதும் ஆபத்தான ஒரு காட்டு விலங்கைப் போல.! நிரம்பியிருக்கும் சிங்கங்களுக்கு மத்தியில் சிறு குழுவாக வாழும் ஆடுகளின் உரிமைகளை பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தில் அபூர்வமாக நிகழும் தருணம். எப்போது வேண்டுமானாலும் ‘பெரும்பான்மை’ என்பது ஆளும் தலைவர்களால் அதன் நிறத்தை கோரமாக மாற்றும் வல்லமையுடையது. ராஜபக்சேவுக்கு இந்த பெரும்பான்மை கிடைத்தவுடன் எதிர்கட்சிகளுடனான எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் தன்னிச்சையாக பல முடிவுகளை அதிரடியாக எடுத்து செயல்படுத்தினார். மதரீதியாகவும், இன ரீதியாகவும் சிங்கள மக்களை தவறான முறையில் வழி நடத்தினார். அதுவே, அவருக்கு பின்னர் எதிரிகளாக மாறத் தொடங்கின. சிங்களம் - பௌத்தத்தையே தலைதூக்கிப் பிடித்ததன் விளைவு மற்ற கூட்டு இனங்கள் முடக்கப்பட்டன; சுரண்டப்பட்டன ; உரிமைகள் பறிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழர்கள், இஸ்லாமியர்கள் இலங்கையில் அதிகளவில் தங்களது உரிமைகளை இழக்கும் வகையில் அரசியல் சூழல் இருந்தது. விளைவு.! 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் உள்ள சர்ச்சில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இருந்தும் ராஜபக்சே பாடம் கற்கவில்லை. மாறாக, இந்த குண்டுவெடிப்பைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பையே ராஜபக்சே கட்டமைத்தார். இதை வைத்தே கோத்தபய ராஜபத்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். முதலில் தமிழர்களை எதிரிகளாக சித்தரித்து, பின்னர் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி, இந்த இரு எதிரிகளிடமிருந்து சிங்களர்களை காக்க தன்னால்தான் முடியும் என்ற போலியான ஒரு பிம்பத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ராஜபக்சே உருவகப்படுத்தினார். அதைக் கணக்கச்சிதமாக கடைக்கோடி வரை கொண்டுசேர்த்தார். ஆட்சி நிர்வாக குளறுபடி, வரி குறைப்பு, கொரோனா ஊரடங்கில் முடங்கிய இலங்கை சுற்றுலா துறை, விவசாயத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தாத தன்மை என அடுத்தடுத்து இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி.
மேலும் படிக்க | இலங்கையில் புர்கா, மதரஸாக்களுக்கு தடை விதிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
அரசுக்கு எந்த விதத்திலும் வருமானம் இல்லாத நிலையில், மேலும் பல தவறான பொருளாதார முடிவுகளை யாரிடமும் விவாதிக்காமல் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ராஜபக்சே எடுத்ததன் விளைவே, இப்போதைய இலங்கை.! கடைசியாக ஏற்றுமதி முற்றிலும் நின்றுபோய், இறக்குமதிக்கு கையேந்தும் நிலைக்கு அந்நாடு வந்துசேர்ந்துள்ளது. சிங்கள - பௌத்த பேரினவாதத்தைப் பேசி பெரும்பான்மையைப் பிடித்த ராஜபக்சேவை, அதே சிங்கள பேரினவாத மக்கள்தான் தற்போது ராஜபக்சேவின் வீட்டை சூறையாடி ஆட்சியைவிட்டு வெளியேறுமாறு கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். சிங்கள - பௌத்த பேரினவாத கூக்குரலை அரசியல்வாதிகள் இப்போது முன்வைப்பதில்லை. காரணம், பசி, பட்டினி, பொருதாளார நெருக்கடி. பல கூட்டு இனங்களும், மதங்களும், மொழிவாரியான மக்களின் ஒற்றுமையும், உழைப்பும்தான் ஒரு தேசத்தை எப்போதும் ஆரோக்கியமான திசையை நோக்கிக் கொண்டு செல்லும் என்ற உண்மையை உலகத்துக்குச் சொல்லியிருக்கிறது இலங்கை. குறிப்பாக, இந்தியாவுக்கு.!
மாநிலங்கள் மீது ‘கை’ வைக்கும் மத்திய அரசு
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தின் குரல் மெல்ல ஒலிக்கத்தொடங்கியுள்ளது. அதற்கு காரணமாக மாநில அரசின் தன்னிச்சை முடிவுகளை மத்திய அரசு கைக் காட்டத்தொடங்கி இருக்கிறது. அதாவது, பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் உருவாகும் என்று பிரதமர் மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்த மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள், பொருளாதார ரீதியாக மீள முடியாதவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநிலங்களின் இதுமாதிரியான திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்துள்ளனர். பொருளாதார திட்டங்கள், மாநில அரசின் உரிமைகள், வரிச்சுமை, ஏற்றுமதி - இறக்குமதி உற்பத்தி நிர்வாகம் ஆகியவை ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்றாலும், இதையெல்லாம் தாண்டிய ‘ஒன்றை’ இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ளுமா உலக நாடுகள்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR