அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பலி எண்ணிக்கை 3100ஐ தாண்டி உள்ளது.
இந்தியாவை பொருத்தவரையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சில மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டாலும் கேரளா மாநிலத்தில் மட்டும் 3 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படிருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லியில் ஒருவர், தெலுங்கானாவில் ஒருவர் என மேலும் இரு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கிங் கவுண்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் சினோஹோமிஷ் கவுண்டியைச் சேர்ந்தவர்.