ஹாங்காங்கில் கொரோனா வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் பலியானார்.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.
இதனிடையே கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதில் ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹாங்காங்கில் கொரோனா வைரசுக்கு 2-வது நபர் பலியாகி இருக்கிறார். 70 வயது முதியவரான அவர் கடந்த 12-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி அவர் இன்று இறந்தார்.