ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ஜப்பானின் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுடன் ஹிரோஷிமா நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு ஒபாமா அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு அவர் பேசியது, "இந்த நினைவிடம் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இடமாக கருதிகிறேன். ஆனால் அப்பணியை நாம் இன்னும் முடிக்கவில்லை, அமைதியை நிலைநாட்டும் பணியை நாம் இன்னும் நிறைவு செய்யவில்லை. இனி எதிர்காலத்தில் அணு ஆயுதப் போர் இல்லை என்ற நிலையையும் இன்னும் நாம் எட்டவில்லை என்பதையே நினைவுபடுத்துகிறது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சம்பவம் நவீன வரலாற்றின் மாற்றுப் புள்ளி, அந்த நிகழ்வை நாம் ஏதோ ஒரு விதத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றார்.
ஹிரோஷிமாவில் தாக்குதளின் போது தப்பிப் பிழைத்த கின்யூ இகேகமி கூறும்போது "அந்த நாள் ஏற்படுத்திய சோகம் இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. எங்கும் உதவி, உதவி எனக் கதறிய சத்தம் இன்னமும் என் நெஞ்சத்தை பதற வைக்கிறது. அணுகுண்டு கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் எங்கள் தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. எங்களது வேதனைகளை ஒபாமா உணர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.
ஹிரோஷிமா நினைவிடத்துக்கு இதற்கு முன்னர் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் சென்றதில்லை. ஒபாமாவே தான் அங்கு சென்றுள்ள முதல் அமெரிக்க அதிபராவார்.
2ம் உலகபோரின் போது ஜப்பானின் நகரமான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. இரண்டு லட்சத்துக்கு மேலான மக்கள் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இது உலகையே உலுக்கி போட்டது. அதனையடுத்து இந்த போரில் ஜப்பான் சரணடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.