UK & US Airstrikes on Yeman 2024 Latest Update: சர்வதேச அரங்கில் தற்போதைய காட்சிகளை காணும்போது மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோமோ என்ற அச்ச உணர்வு அதிகமாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது. கடந்தாண்டு இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கி தற்போது வரை தாக்குதல்கள் தொடரும் நிலையே உள்ளது.
தற்போது 2024ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை கூட்டாக இணைந்து ஏமன் நாட்டின் மீது இன்று அதிகாலை முதல் தாக்குதலை தொடங்கி உள்ளன. ஏடன் வளைகுடாவில் உள்ள சர்வதேச கப்பல் பாதைகளில் ஹவுதிகள் கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. இது கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் ஹவுதி குழுவின் 27ஆவது தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 9ஆம் தேதி செங்கடலில் (Red Sea) ஹவுதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஏமனில் இரவு நேரத் தாக்குதல்கள் நடந்தன. அமெரிக்க மற்றும் பிரிட்டனின் கடற்படை, தெற்கு செங்கடலை நோக்கி ஏவப்பட்ட 21 ஹவுதி ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக நேற்று தெரிவித்தது. முதல் இரண்டு போர்கள் தனிப்பட்ட இரு நாடுகளுக்கான மோதலாக பார்க்கப்பட்டது. போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு பல நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்ததே தவிர நேரடியாக போரில் ஈடுபடவில்லை. ஆனால் தற்போது தொடங்கியுள்ள ஏமன் மீது 10 நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஏமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் அமெரிக்காவிற்கு எதிரான மனநிலையில் உள்ள நாடுகளும் ஏமனுக்கு ஆதரவு அளிக்க முன் வரும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஏமன் ஹவுதி தலைவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஏமனுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலும் காசாவைப் பாதுகாப்பதில் இருந்து நம்மைத் திசைதிருப்பும் என்று அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் சியோனிஸ்ட் எதிர்பார்க்கிறார்களா? காற்றில் சிதறிய அணுக்களாக மாறினாலும் காசாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறோம்.
சியோனிசக் கப்பல்கள் மற்றும் சியோனிச நிறுவனத்திற்குச் செல்பவர்களை நாங்கள் தொடர்ந்து குறிவைப்போம். நாங்கள் அமெரிக்காவை எதிர்கொள்வோம், அதை மண்டியிட வைப்போம், அதன் போர்க்கப்பல்களை எரிப்போம், அதன் அனைத்து தளங்களையும், அதற்கு ஒத்துழைக்கும் எவரையும் நாங்கள் எரிப்போம்" என தெரிவித்திருப்பது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அறிக்கையில், ஹவுதிகள் நேரடியாக அமெரிக்க கப்பல்களை குறிவைத்ததாக கூறினார். கடந்த டிசம்பர் மாதத்தில், 20க்கும் மேற்பட்ட நாடுகள் செங்கடலில் வணிகப் போக்குவரத்தைப் பாதுகாக்கும் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் (Operation Prosperity Guardian) என்று அழைக்கப்படும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் பங்கேற்க ஒப்புக்கொண்டன. இருப்பினும், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் தற்போதைய தாக்குதல்கள் அந்த தற்காப்பு கூட்டணிக்கு வெளியே நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரவு தெரிவித்ததாக பிடன் கூறினார். மேலும், இந்த பொறுப்பற்ற தாக்குதல்களுக்கு சர்வதேச சமூகத்தின் பதில் ஒன்றுபட்டது மற்றும் உறுதியானது என்று ஜோ பிடன் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானம், கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், தாக்குதல்கள் ஹூதியின் இராணுவத் திறனை பலவீனப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டதாகவும் கூறினார். அவை வெறும் பெயருக்கு செய்த தாக்குதல் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
காஸாவை கட்டுப்படுத்தும் பாலஸ்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸுக்கு ஆதரவாகத் தங்கள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதிகள் கூறுகின்றனர். 1,200 பேரைக் கொன்ற இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 23,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஏமன் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குண்டுவீச்சு தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர அமர்வுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஏமன் மீதான தாக்குதல் ஐக்கிய நாடுகளின் சாசனத்தை மீறுவதாகக் கருதுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ