ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை பாக்., குற்றசாட்டு...!
ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷியாவின் S-400 ஏவுகணைகள், 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றை வாங்குவது தொடர்பாக, இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், ரக ஏவுகணை தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைத்துவிடும். புதிய ஆயுத போட்டிகளை ஏற்படுத்தும். எங்களுக்கு எதிராக எந்தவொரு சக்தி மிக்க ஏவுகணையை பயன்படுத்தினாலும் அதனை தாக்கி அழிக்கும் சக்தி பாகிஸ்தானுக்கு உண்டு. தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பில் S-400 ரக ஏவுகணை வாங்குவதற்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் புதின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. S-400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் முடிவு மீண்டும் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என கூறியுள்ளது. 1998 ஆம் ஆண்டு இருநாடுகளும் நடத்திய அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட பதற்றம் ஓய்ந்த நிலையில், தற்போது S-400 ஏவுகணைகள் வாங்குவதும் பதற்றத்தை அதிகரிக்கும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.