திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாக களமிறங்க போகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகாவிட்டாலும், கனிமொழி தூத்துக்குடி தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், ஆ ராசா நீலகிரி தொகுதியிலும் களமிறங்க இருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் மட்டும் கனிமொழி மீண்டும் போட்டியிட வேண்டும் என 500க்கும் மேற்பட்டோர் திமுக தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரும் கனிமொழி தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட வேண்டும், அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிறோம் என கடந்த சில மாதங்களாகவே சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க | திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு இறுதியில் கடும் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியிலேயே முகாமிட்டிருந்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்ற அவர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்கு உடன் அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார். தனியார் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி அறிவுரையின்பேரில் உதவிகள் செய்தன.
இதனால் அவருக்கு தொகுதிக்குள் நல்ல பெயர் இருப்பதால் அவரையே மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என திமுகவினர் விருப்பம் தெரிவித்து, கட்சி தலைமைக்கு விருப்பமனுவும் கொடுத்திருக்கின்றனர். அவரை தவிர வேறு யாரும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரையே திமுக தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அவருக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற முடிவில் அதிமுக, பாஜக இருக்கின்றன.
இப்போது தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவினார். இதனால், கனிமொழியை எதிர்த்து வலுவான வேட்பாளர் இறக்க வேண்டும் என்பதால் பாஜக சார்பில் சசிகலா புஷ்பா மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த சரத்குமார் என இரண்டு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இருவருமே கனிமொழிக்கு எதிராக களமிறங்க விருப்பம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வலுவான வேட்பாளர் யார்? என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ