நடிகர் விஜய் தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வமா வருகை தந்துள்ளார். பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அறிக்கை மூலம் தொடங்கிய அவர், நேரடியாக சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், நேரடியாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுவரை கட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கம், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை அரசியல் மயப்படுத்தும் வேலைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை! ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
இப்போது நடித்துக் கொண்டிருப்பதோடு இன்னொரு படம் பாக்கி இருப்பதால், அந்த பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு நேரடியாக அரசியல் களத்தில் முழுநேரமாக பணியாற்ற இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். இப்போது கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான ஒப்புதல் முழுவதுமாக கிடைத்தபிறகு கட்சியின் சின்னம், கொடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் விஜய் தெரிவித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் பனையூரில் நடைபெற்றது. அதில் விஜய் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சினிமா படப்பிடிப்பில் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் பேசினார்.
அதில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் நேரடியாக களப்பணிக்கு வர இருப்பதையும் நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த விஜய் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
அவர் திமுகவில் பணியாற்றிக் கொண்டிருப்பது குறித்து புகார்கள் சென்ற நிலையில் அவர் உடனடியாக தவெக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அவரது சகோதரர் சுமன், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பில்லா ஜெகன், திமுக மற்றும் தவெக- என இரண்டு கட்சிகளிலும் பணியாற்றிக் கொண்டிருந்ததால், புஸ்ஸி ஆனந்த் கண்டித்துள்ளார். அவரது கண்டிப்புக்கு பிறகும் பில்லா ஜெகன் திமுகவுக்கு பணியாற்றியதால் தவெகவில் இருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு போட்டியாகவே விஜய் அரசியல் செய்வார் என கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திமுகவுக்கு பணியாற்றுவதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் கவனிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | கொடூர சம்பவம்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், 5 பேர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ