கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், நூற்றாண்டு விழா அலங்கார வளைவுக் கம்பத்தில் மோதி கோவை இளைஞர் பலியானதை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
"கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். திருமணத்திற்குப் பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ள அவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பழனி கோவிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும்போது, பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் திடீரென்று மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் தலைமீது ஏறி தலை நசுங்கிக் கோரமான முறையில் உயிர் இழந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து குறித்து தகவல் வெளியானதும் கோவை மாநகராட்சி ஆணையர், உரிய அனுமதி இல்லாமல் அலங்கார வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சாலையின் நடுவே ஐம்பது அடி உயரத்தில் சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு இளைஞர் ஒருவரின் உயிரைக் குடித்திருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நடத்துகின்ற இந்த ஆடம்பர விழா, தமிழக மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஒரு இடத்தில்கூட இந்த நூற்றாண்டு விழா நடைபெறவில்லை. அரசு கருவூலத்தை வீணடித்து நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் அரசியல் பேசுவதும், உட்கட்சிப் பிரச்சினைகளைப் பேசுவதும்தான் வாடிக்கையாக இருக்கிறது.
இதுபோன்ற விழாக்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகமும், ஆளும்கட்சியினரும் செய்கின்ற ஏற்பாடுகள் அருவருக்கத் தக்கவை. பள்ளிக் குழந்தைகளைக் கொண்டுவந்து மணிக் கணக்கில் உட்கார வைத்து சித்ரவதை செய்யும் போக்கை நீதிமன்றமே கண்டித்து இருக்கிறது.
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் மோதி இளைஞர் ரகுபதி உயிர்ப்பலி ஆகியிருப்பது போன்ற நிகழ்வு இனியும் தொடரக்கூடாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான காலத்திலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக கட்-அவுட் கலாச்சாரம், காலில் விழும் அநாகரிகம் தமிழக அரசியலிலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இனியாவது அண்ணா திமுக அரசு இதுபோன்ற விழாக்களை ஆடம்பரத்துடன் பொதுமக்கள் எரிச்சல் அடையும் வகையில் நடத்துவதைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கோவையில் உயிர் இழந்த இளைஞர் ரகுபதி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
என குறிப்பிட்டுள்ளார்.