தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது!
தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்றைய நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 721-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 626 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர்.
சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 257 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 212 ஆண்களும், 45 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.