தமிழ்நாடு தேர்வு வாரியம் நடத்திய குரூப் 1 தேர்வில் கேள்வி-பதில் தவறு என தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!
தமிழ்நாடு தேர்வாளர்கள் வாரியம்(TNPSC) நடத்திய குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கான மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து குரூப் 1 தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின் போது, 150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என TNPSC ஒப்புக்கொண்டது. இதற்கான மதிப்பெண்ணை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும், தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்வு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டு விக்னேஷின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.