tnGovt எச்சரிக்கை: பள்ளி வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கினால்...

பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக இயக்கினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

Last Updated : Aug 16, 2019, 06:28 PM IST
tnGovt எச்சரிக்கை: பள்ளி வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கினால்... title=

பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக இயக்கினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., 

பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

1988-ம் வருட மோட்டார் வாகன சட்ட பிரிவு 183-ன் படி அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை குற்றத்திற்கு ரூ.400/- அபராதமும் இரண்டாவது முறை குற்றத்திற்கு ரூ.1000/-அபராதமும், மேலும் இவ்வாகனத்தின் உரிமையாளருக்கு வேகமாக ஒட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300/- மறுமுறை அதே குற்றம் இழைக்கப்பட்டால் ரூ.500/-ம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது போல் அச்சுறுத்தும் வகையிலும் வேகமாக வாகனம் இயக்குவது 1988ம் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184ன் படி முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000/- அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அதே குற்றத்தை இரண்டாவது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அல்லது ரூ.2000-ம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பு எண். GSR No.290 (E), நாள்.15.04.2015-ன் படி போக்குவரத்து வாகனங்களுக்கு (பள்ளி/கல்லூரி வாகனங்கள் உட்பட) வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இயக்கப்படும் நிலையில் இருத்தல் வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகளின் தணிக்கையின்போதோ அல்லது தகுதிச் சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்/பகுதி அலுவலகங்களிற்கு வரும் போதோ வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாமலோ, அல்லது அக்கருவி இயங்காமல் உள்ளது கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் அனுமதிச்சீட்டின்(Permit) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓப்பந்த ஊர்திகள் அனுமதிச்சீட்டின் படி, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச்செல்வது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 177(1)ன்படி நபருக்கு ரூ.100/- வீதம் அபராதம் மற்றும் அனுமதிச்சீட்டின்மீது நடவடிக்கை எடுக்கும் குற்றமாகும். மேலும் பேரூந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வது அனுமதிச்சீட்டு தற்காலிக தடைஅதிக பட்சம் 30  நாட்கள் (அல்லது)ரூ.9000/-வரை இணக்க கட்டணம் வசூலிக்க 1989ம் வருடதமிழ்நாடு மோட்டார் வாகன விதி பிரிவு 206ன் கீழ் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகள், வாகனங்களின் அதிகவேகத்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும் ஏற்படுகிறது. எனவே, அவ்வகை வாகனங்களின் அனுமதிச்சீட்டின்மீது (Permit) நடவடிக்கையும், அவ்வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் உரிமத்தினை மூன்று மாதங்களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, மேற்காணும் குற்றங்கள் கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே, வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாகனத்தை பொதுச்சாலையில் இயக்கும்போது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்திலும், அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஏற்றிச் சென்று பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இதுசம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 5430 என குறிப்பிட்டுள்ளது.

Trending News