மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீட்டை காக்க தமிழக அரசு அவரச சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைப்பதற்கு காரணமான இந்த ஏற்பாட்டை தமிழக அரசு பாதுகாக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 789 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 15 பிரிவுகளில் 396 மருத்துவ பட்டய மேற்படிப்புகளும், 8 பிரிவுகளில் 40 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1205 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் உருவாக்கிய விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது.
அதன்படி அனைத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களும் வெளியாட்களைக் கொண்டு தான் நிரப்பப்படும் என்றும், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாது என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த 50% இடஒதுக்கீட்டால் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மருத்துவர்களில் 603 பேருக்கு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கிடைத்து வந்தன. இது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கும், மருத்துவ சேவைக்கும் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்பதால் மருத்துவர்கள் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்தனர். அதுமட்டுமின்றி, 50% ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று விதி இருப்பதால் அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக மருத்துவர்கள் கிடைத்து வந்தனர்.
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதிக ஊதியம் வழங்கும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் நிலவிய தட்டுப்பாட்டை இந்த ஏற்பாடு தான் போக்கி வந்தது. இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இவ்விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்குத் தான் இருக்கிறது. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாகவோ, அல்லது தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீட்டு முறை தொடரும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வைப்பதன் மூலமாகவோ 50% இடஒதுக்கீட்டை தமிழக அரசு மீட்க வேண்டும்.
மற்றொருபுறம், மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 3 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக முன்தேதியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி, அதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதியையும் பெற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அதை அரசு வழக்கறிஞர் எதிர்க்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதிக்கு எதிராகவும் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.