வெங்கய்ய நாயுடு பேச்சு வேடிக்கையாக இருக்கிறது - ஸ்டாலின் காட்டம்

Last Updated : Apr 25, 2017, 06:25 PM IST
வெங்கய்ய நாயுடு பேச்சு வேடிக்கையாக இருக்கிறது - ஸ்டாலின் காட்டம் title=

விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கியக் கடனை மத்திய அரசுதான் தள்ளுபடி செய்யப் வேண்டும் என்பது கூடவா மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிற்கு தெரியாது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மு. க. ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:

வங்கிக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை வந்திருந்த போது, விவசாயிகளின் போராட்டம் பற்றி பேட்டி அளித்தார். அதில் பல தவறான தகவலை தந்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றக் கடனை தள்ளுபடி செய்வது வழக்கமல்ல என்று தவறாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

இந்திய பிரதமராக மன்மோகன்சிங் இருந்த போது, ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தார். வி. பி. சிங் பிரதமராக இருந்த போது, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார்.

இதெல்லாம் மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய வெங்கய்ய நாயுடுக்கு தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூட தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அந்த அளவிற்குதான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்னைகளில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டத்தை மிகப்பெரியளவில் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Trending News