CHENNAI: பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (Viduthalai Chiruthaigal Katch) சார்பில் சனிக்கிழமை (24.10.2020) மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) தெரிவித்துளார். மேலும் தனது அறிக்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து #RejectManu என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார்.
அதேநேரத்தில் தற்போது #BanManu என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களிலும் பிரபலமாகி வருகிறது.
தனது அறிக்கையில் தொல். திருமாவளவன் கூறியதாவது, "சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி (Manusmriti), அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.
ALSO READ | ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்
குறிப்பாக, பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் (Babasaheb Ambedkar) 1927-ம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் (Thanthai Periyar) அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்.
#திரிபு_வக்கிரம்:
காலங்காலமாக ப் பெண்களை இழிவுசெய்வது மனுதர்மம் என்னும் சனாதனமே!அதுபற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல்!
அவதூறுகளுக்கு அஞ்சேல்!
அணிதிரள்! ஆர்த்தெழு! ஆணாதிக்கம் அறுத்தெறி!
ஆதிக்கம் வீழ்த்து!#பெண்ணுரிமை_போராளி_திருமா pic.twitter.com/DI6bKzyMgm— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 23, 2020
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது.
தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் (Santhanam Dharma) மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில், இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
ALSO READ | ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் தேர்தல் ஆணையம் -திருமா!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மனுஸ்மிருதியை தர்ம நூலாக ஏற்றுக்கொண்ட சனாதனிகள் ஆட்சி நடத்துவதே காரணம். மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்த சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது.
எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் (DR Ambedkar), தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் "மனுநூலைத் தடைசெய்!" என்ற இந்த அறப்போராட்டத்திற்கு சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விசிக நிறுவனர் மற்றும் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.